நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, "சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது" என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், "கோயில் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த தனி நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, "நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, தமிழக அரசுத்தரப்பில் ஆஜாரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story