"ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது உறுதி" - ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு


ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது உறுதி - ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
x

ஈரோடு கிழக்கில் போட்டியிடுவது உறுதி என ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி இடைதேர்த்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவும் காங்கிரசுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் தமாகா ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் தமாகா போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அதிமுக இபிஎஸ் அணி போட்டியிட விரும்பியது. இதனை தமாகாவும் ஏற்றுக் கொண்டது. அதிமுக ஓபிஎஸ் அணி போட்டியிட விரும்பினாலும் பாஜகவை போட்டியிட வைக்க வேண்டும் என முயற்சித்தது. இதனால் பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெறும்.

நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால், ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவிதான் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


Next Story