தொடர் விடுமுறை எதிரொலி- விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி
விமான டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை,
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக, சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி, வேலை காரணமாக வந்தவர்களும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பஸ், ரெயில்களில் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகி விடுவார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு தொடங்கி இருக்கைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது. நேற்றும், இன்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
தொடர் விடுமுறை என்பதால் சென்னை விமான நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பேருந்து, ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமான பயணத்தை நாடியுள்ளனர்.
இந்த நிலையில், தொடர் விடுமுறை எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட் கட்டணங்கள் பலமடங்கு உயர்துள்ளன. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
சென்னை - தூத்துக்குடிக்கு வழக்கமான விமான கட்டணம்-ரூ.3,624 என இருந்த நிலையில், இன்று-ரூ.13,639 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னை-மதுரை விமான கட்டணம்- ரூ.3,367-ல் இருந்து ரூ.17,262 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம்- ரூ.2,264-ல் இருந்து ரூ.11,369 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.