கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நிறுத்தக்கூடாது - டாக்டர் ராமதாஸ்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நிறுத்தக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவர் சேர்க்கை குறைந்ததை காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம் பட்டப்படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், இன்னொரு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் படிப்பையும் நிறுத்துவதற்கும், அவற்றுக்கு மாற்றாக மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள புதிய பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்திருக்கிறது.
மாணவர் சேர்க்கை குறைவு என்ற ஒற்றை காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு பட்டப்படிப்புகளை நிறுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ள வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் புதிய பட்டப்படிப்புகளைத் தொடங்குவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது கூடுதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, கணிதம் பட்டப்படிப்பை மூடிவிட்டு, வேறு படிப்பை தொடங்க வேண்டிய தேவையில்லை. மாணவர்கள் குறைவு என்பதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது. ஒரே ஒரு மாணவர் சேர்ந்தாலும் அவருக்காக அந்த படிப்பு நடத்தப்பட வேண்டும்.
கணித பாடம் கடினமானதாக இருப்பதால் அதில் சேர மாணவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. அது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.