தேனியில் சைபர் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு:கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை:மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சிறப்பு பேட்டி


தேனியில் சைபர் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு:கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை:மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

தேனி

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தன. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே 'தினத்தந்தி' நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- மாநாட்டில் தேனி மாவட்டத்துக்கு என்று முதல்-அமைச்சர் சிறப்பு உத்தரவுகள் எதுவும் வழங்கினாரா?

பதில்:- தேனி மாவட்டத்துக்கு என்று குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை. பொதுவாக பல்வேறு அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். போக்சோ வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். போக்சோ குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கஞ்சா, குட்கா, 'கூல் லிப்' போன்றவை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர், துணை சூப்பிரண்டு நிலையில் நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை முதல்-அமைச்சர் பிறப்பித்தார்.

குற்றத்தடுப்பு

கேள்வி:- தேனி மாவட்டத்துக்கான சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநாட்டில் ஏதேனும் பேசினீர்களா?

பதில்:- தேனி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் தேனி மாவட்டத்துக்கு என்று தனிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.

கேள்வி:- தேனி மாவட்டத்தில் குற்றத்தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

பதில்:- குற்றத்தடுப்பு நடவடிக்கையாக பகல், இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, குற்றத்தடுப்பு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாக வசதிக்காகவும், போலீசார் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் ராயப்பன்பட்டி, ஜெயமங்கலம், வீரபாண்டி உள்பட 7 போலீஸ் நிலையங்களை மேம்படுத்தி போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா, குட்கா விற்பனை

கேள்வி:- மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுத்ததற்காக முதல்-அமைச்சர் விருது பெற்றீர்கள். இந்தாண்டு இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

பதில்:- மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் வரை 1,369 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டனர். 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் புதிய நடவடிக்கையாக, பழைய கஞ்சா வியாபாரிகள் 107 பேர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. அதை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். மாவட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை 312 வழக்குகளில் மொத்தம் 3,833 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் அருகில் கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், 431 பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,480 கிலோ கஞ்சாவும் அழிக்கப்பட்டுள்ளது.

விபத்துகள் குறைவு

கேள்வி:- மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இப்போது விபத்துகள் குறைந்துள்ளதா? விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறுங்கள்?

பதில்:- மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டி காட்ரோடு முதல் குமுளி வரையும், ஆண்டிப்பட்டி கணவாய் முதல் போடிமெட்டு வரையும் ஆய்வுகள் நடத்தி விபத்து அபாயம் நிறைந்த இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூடுதல் ஒளிரும் பட்டைகள், சாலையின் மையத்தில் ஒளிரும் பட்டைகள், தேவையான இடங்களில் எச்சரிக்கை விளக்கு கம்பங்கள் உள்பட பல்வேறு தடுப்பு நடவடக்ிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஆண்டை விட விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு மொத்தம் 1,123 விபத்துகள் நடந்தன. அதில் 338 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 750 வாகன விபத்துகள் நடந்துள்ளன. அதில் 209 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 52 பேர் தாங்களே விபத்துக்குள்ளாகி இறந்தவர்கள்.

சைபர் குற்றங்கள்

கேள்வி:- சைபர் குற்றங்களை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

பதில்:- சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. பல்வேறு நபர்களுக்கு அவர்கள் இழந்த பணம் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளன. வெளிமாநில குற்றவாளிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற குற்றங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் போலீசார் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களுடன் நல்லுறவு

கேள்வி: போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த எந்த மாதிரியான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்:- பொதுமக்களிடம் போலீசார் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் நூலகம் செயல்படுகிறது. பெரியகுளத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மூலமாக போலீஸ் மற்றும் ராணுவப் பணிக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. போலீஸ், பொதுமக்கள் இடையே நல்லுறவு விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story