ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோவையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க கலெக்டர் நிர்ணயித்தார். ஆனால் அந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இதைத்தொடர்ந்து கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் காந்தி ஜெயந்தி தினமான நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்தனர். பின்னர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.
வேலை நிறுத்தம்
இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அதன்படி கோவை மாநகரில் 3 ஆயிரத்து 500 தூய்மை பணியாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
கலெக்டருக்கு மனு
பின்னர் தூய்மை பணியாளர்கள் கூறும்போது, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியில் சேர்க்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து நாளை(இன்று) கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் பணிக்கு செல்லவில்லை. முன்னதாக மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகர பகுதிகளில் சுகாதார பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.