ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2023 1:00 AM IST (Updated: 21 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவையில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். அதன்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 சம்பள உயர்வை வழங்க கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டம்

இதன் ஒரு பகுதியாக நேற்று காலையில் ஒப்பந்த தூய்மை பணியார்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. மைதானத்திற்கு வந்தனர். பின்னர் பணிகளை புறக்கணித்துவிட்டு கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம், தூய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்துக்கு கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்க தலைவர் தமிழ்நாடு செல்வம், தூய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வினோத் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்த தூய்மை பணியாளர்களாக மாற்ற கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சம்பள உயர்வு கேட்டோம். கலெக்டர் ரூ.721 சம்பளம் நிர்ணயித்தார். அதை கூட இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை. எனவே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றனர்.

இதன் காரணமாக வ.உ.சி. மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் மாநகரில் குப்பைகள் தேங்காதவாறு நிரந்தர தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

1 More update

Next Story