தேர்வில் சர்ச்சை கேள்வி: விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் - அமைச்சர் பொன்முடி


தேர்வில் சர்ச்சை கேள்வி: விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் - அமைச்சர் பொன்முடி
x

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சர்ச்சை கேள்வி குறித்து விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார்? என்று ஒரு மதிப்பெண் வினா கேட்கப்பட்டு இருந்தது. இது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

சர்ச்சைக்குரிய வினாத்தாளை தயாரித்த பேராசிரியர் குழு மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி தலைவவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், சர்ச்சை கேள்வி விவகாரம் குறித்து சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி குறித்து விசாரிக்க உயர் கல்வித்துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் ஜாதிய ரீதியான கேள்வி தொடர்பாக, விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story