அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு விரைவில் விளக்கமளிப்பார் - பரம்பொருள் அறக்கட்டளை தகவல்


அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு விரைவில் விளக்கமளிப்பார் - பரம்பொருள் அறக்கட்டளை தகவல்
x

அரசுப்பள்ளியில் நடைபெற்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்" என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த சர்ச்சையை தொடர்ந்து மகா விஷ்ணு தலைமறைவானதாக தகவல் பரவியது. இந்த நிலையில், மகா விஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், இந்த பிரச்சினை குறித்து விரைவில் அவர் தனது தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்றும் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


1 More update

Next Story