தர்மபுரி மாவட்டத்தில் 2,064 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

தர்மபுரி மாவட்டத்தில் 2,064 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2064 சிறப்பு முகாம்களில் நடைபெற உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 21- ந்தேதி வரை நடந்த தடுப்பூசி மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 12 வயதிற்கு மேல் உள்ள 11 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 26051 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75- வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை கடந்த 15-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் முககவசம் அணிந்து வருவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.