திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கைது


திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கைது
x
தினத்தந்தி 27 May 2023 1:39 AM IST (Updated: 27 May 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எல்பின் நிறுவனம்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதன் அலுவலகங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும், பணம் இரட்டிப்பாக மாறும் என்பது உள்ளிட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சென்றனர். இதை நம்பி பொதுமக்கள் கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

மேலும் இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான 'ஸ்பாரோ குளோபல் டிரேட்', வராகமணி பிரைவேட், சென்னை, ஜேபி ஓரியண்ட் டெக் மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆர்.எம். வெல்த் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட், இன்பி கேலக்ஸி மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அறம் மக்கள் சங்கம் என பல துணை நிறுவனங்களையும் நடத்தி வந்தது. இந்த நிறுவனத்தினர் முதலீட்டாளர்களிடம் பல கோடி மோசடி செய்ததாக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன.

கவுன்சிலர் கைது

இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. அவர்கள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கியமானவர்களில் திருச்சி கீழப்புலிவார்டு ரோட்டை சேர்ந்த பிரபாகரன் (வயது 45) என்பவரும் ஒருவர் ஆவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரபாகரன், திருச்சி மாநகராட்சியின் 17-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்தநிலையில் இந்த வழக்கில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர் மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் இவ்வாறான நிறுவனங்கள் மீது வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்யும் போது, அவர்களின் உண்மை தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story