போலீஸ்காரர் தற்கொலை விவகாரம்: தனிமையை போக்க ஆயுதப்படை போலீஸ்காரர்களுக்கு கவுன்சிலிங்


போலீஸ்காரர் தற்கொலை விவகாரம்: தனிமையை போக்க ஆயுதப்படை போலீஸ்காரர்களுக்கு கவுன்சிலிங்
x

ஆன்லைன் சூதாட்டத்தில் போலீஸ்காரர்கள் ஈடுபடுவதை தடுக்க கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

கோவை:

கோவையில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் காளிமுத்து (வயது 29) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் போலீஸ்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் காளிமுத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது காளிமுத்து வெடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

உடனே அவரை முத்துவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் காளிமுத்து ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை இழந்த அவர், ரம்மி விளையாடி மீட்டு விடலாம் என்று தொடர்ந்து விளையாடி உள்ளார். இதற்காக தனது நண்பர்களி டம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார். இதனால் மணம் உடைந்த காளிமுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, வங்கி பாது காப்பு, கைதிகளை சிறைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஈடுபடுகின்றனர். அது போன்ற பணி நேரத்தில் அவர்கள் தனிமையில் நீண்ட நேரம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இது போன்ற நேரங்களில் அருகில் பேசுவதற்கு யாரும் இல்லாததால் ஒரு சில போலீஸ்காரர்கள், பொழுது போக்கிற்காக செல்போனில் விளையாடுவது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவது என இருப்பார்கள்.

அந்த நேரத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து வரும் விளம்பரங்களை பார்த்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது. பின்னர் அதில் சிக்கி அடிமையாகி விடுகிறார்கள்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை இழந்து. கடைசியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை முடிவை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தில் போலீஸ்காரர்கள் ஈடுபடுவதை தடுக்க கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

கவுன்சிலிங்கில் தனிமையில் தவிக்கும் ஆயுதப்படை போலீஸ்காரர்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் நாளை வழங்கப்பட உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.


Next Story