பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பது நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகும்
நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகும்
திருப்பூர்
பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பது நாட்டையே அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகும் என்று அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திருப்பூரில் பேட்டியின் போது கூறினார்.
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பூரில் குக்கி இன மக்களின் பாதுகாப்பு தொடர்பாக கடந்த 3 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகிறது. அந்த மாநில பா.ஜனதா அரசால் சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், கிறிஸ்தவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய் திறக்கவில்லை.
வன்முறை கலாசாரம்
மணிப்பூர், அரியானாவில் கலவரம். உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகின்றனர். இதுபோன்ற ஒரு வன்முறை கலாசாரத்தை பா.ஜ.க. கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பா.ஜ.க. மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் அந்த இயக்கங்களை தடை செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் காவல்துறை, ராணுவம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அரசு ஊழியர்களுக்குள் ஊடுருவி இருப்பது பாசிச சிந்தனை கொண்ட அரக்கர்கள் அரசுத் துறையில் ஊடுருவி இருப்பது இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.
அழிவு பாதை
தற்போது பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா என்ற வலுவான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, அமலாக்கத்துறை, ஊடகங்கள் உள்பட முக்கியத் துறைகள் தங்களது சுதந்திரத்தை இழந்து மோடி வசமாகி விட்டன. பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பது நாட்டையே அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாகும்.
எனவே 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை அண்ணாமலை எப்போது வெளியிடுவார் என்று தெரியவில்லை. அவர் பாதயாத்திரை செல்ல வேண்டுமென்றால் பிரதமரையும், அமித்ஷாவையும் எதிர்த்துதான் செல்ல வேண்டும்.
நாடு முழுவதும் 8 கோடி பேருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். அந்த 8 கோடி பேர் யார்? என்பது தெரியவில்லை. ஆனால் பா.ஜ.க. காரியகர்த்தாக்களுக்கும், தொண்டர்களுக்கும் கடன் கொடுத்துள்ளனர். எனவே வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை. ஊழலை எதிர்த்து பாதயாத்திரை செல்ல அண்ணாமலைக்கு அருகதை இல்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.