நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - வழக்கை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு


நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - வழக்கை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 12 March 2024 4:51 PM GMT (Updated: 13 March 2024 8:10 AM GMT)

உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்-மீனாட்சி. இவர்கள், கடந்த 2015-ம் ஆண்டு மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வழக்கில், நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு ஓடி விட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். பெற்றோர் பராமரிப்பிற்காக நடிகர் தனுஷ் எங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளை ரத்து செய்தது. இந்த வழக்கில் தனுஷ் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளதால் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கதிரேசன், மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது.

இதை எதிர்த்து கதிரேசன், ஐகோர்ட்டு கிளையில் மறுசீராய்வு மனு செய்திருந்தார். அதில், 'தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையின் முடிவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை. இதை கவனிக்காமல், தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து, முறையாக விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இது ஒரு அபத்தமான வழக்கு என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Next Story