மினி லாரி மோதி தம்பதி பலி
சின்னசேலம் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது மினிலாரி மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அந்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65). இவருடைய மனைவி குமாரி (60). இவர்களது மகள் பல்லவி (35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதையடுத்து பல்லவிக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்காக குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்த சின்னசாமி முடிவு செய்தார்.
அதன்படி சின்னசாமி, தனது மனைவி குமாரி, மகள் பல்லவியுடன் மொபட்டில் சின்னசேலம் அருகே வீரபயங்கரம் அய்யனார் கோவிலுக்கு புறப்பட்டார். மேலும் அவருடன் சின்னசாமியின் மகன் வினோத், அவரது மனைவி பவானி, மகன் கமலேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். குரால் சாலையில் சென்றபோது எதிரே வந்த மினிலாரி மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது.
டிரைவர் கைது
இந்த விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சி்ன்னசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆஸ்பத்திரியில் குமாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வினோத் உள்ளிட்ட 4 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மினிலாரி டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை கிழக்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.