தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு
தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி நேற்று நேரில் ஆய்வு நடத்தினார்.
ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி தர்மபுரி அருகே தடங்கத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று காலை வந்தார். இந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோர்ட்டுகள், நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்வோருக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். அலுவலக பதிவேடுகளையும் அப்போது பார்வையிட்டார்.
அதிகாரிகள்
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், நீதித்துறை பணியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டங்களில் பங்கேற்று துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதேபோல் வக்கீல் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். முன்னதாக இந்த ஆய்வின் தொடக்கத்தில் தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்த ஆய்வு கூட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, கலெக்டர் சாந்தி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா, குடும்ப நல கோர்ட்டு நீதிபதி விஜயகுமாரி, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ் மற்றும் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.