கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; டி.ராஜா, முத்தரசன் கைது


கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; டி.ராஜா, முத்தரசன் கைது
x

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.ராஜா, முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கவர்னருக்கு எதிரான போராட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சைதாப்பேட்டை பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுசெயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி. சுப்பராயன், எம்.எல்.ஏ. மாரிமுத்து, மாநில துணை செயலாளர்கள் வீரபாண்டியன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு

ஆர்ப்பாட்டத்தில் டி.ராஜா பேசியதாவது:-

அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். தமிழகம், கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களின் கவர்னர்கள் மத்திய அரசின் எடுபிடிகளாக இருக்கின்றனர்.

கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கவர்னர்கள் இல்லை. கவர்னர்களுக்கு பிரத்யேக அதிகாரம் கிடையாது. ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி தன்னிடம் அதிகாரம் குவிந்து கிடப்பதாக நினைக்கிறார். நாட்டில் கவர்னர் பதவி தேவையற்றது என்பது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சட்டத்துக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது. இந்தியாவை ஒற்றை பரிணாம நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இதைத்தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். நாடு முழுவதும் இந்த குரல் மேலோங்கி வருகிறது.

அரசியலமைப்பு சட்டத்துக்கு, மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்

முத்தரசன் பேசும்போது, 'கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேற்றப்படும் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் நீடிக்கும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து நாளை (இன்று) இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மயிலாடுதுறையில் விவசாயிகள், கோவில் மனையில் குடியிருப்போர்கள் மாநாடு ஜனவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது' என்றார்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவதற்கான பேரணி தொடங்கியது. இந்த பேரணியை ஆர்.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக விரோத நடவடிக்கை எடுத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி நாம் ஒன்றுப்பட்டு நடத்தும் இந்த போராட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்' என்றார்.

இதைத்தொடர்ந்து டி.ராஜா தலைமையில் பேரணி தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செங்கொடியை கையில் ஏந்தியவாறு அனைவரும் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். பனகல் மாளிகை அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் பேரணியை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

டி.ராஜா, முத்தரசன் உள்ளிட்டோரும் கைதாகினர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வேன்கள், மாநகர பஸ்கள் மூலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பேரணியால் சைதாப்பேட்டை பகுதி பரபரப்பாக காணப்பட்டது.;


Next Story