பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தேவையா?


பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தேவையா?
x

வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நேரம் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்


வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நேரம் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி

நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவள அன்று பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவார்கள். இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என நேர மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிப்பது குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்.

ஆண்டுக்கு ஒருநாள்

ராமநாதபுரம் மாவட்ட பட்டாசு உரிமம் பெற்ற சங்கத்தின் செயலாளர் வல்லப கணேசன்: ஆண்டுக்கு ஒரு நாள் தீபாவளி அன்றுதான் அனைவரும் அதிக மகிழ்ச்சியுடன் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவார்கள். தீபாவளி என்றாலே முதலில் அனைவருக்கும் தெரிவது பட்டாசு தான். பட்டாசு இல்லையென்றால் தீபாவளி இல்லை என்று சொல்லலாம். அப்படி இருக்கும்போது தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது மிகுந்த ஒரு ஏமாற்றமான அறிவிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

நேர கட்டுப்பாடு விதிப்பதால் சிறுவர்கள் முதல் குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் முழுமையாக ஏமாற்றம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் ஓடும் கார், பேருந்து, லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் தினமும் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றது.

ஆனால் ஒரு நாள் வெடிக்கப்படும் பட்டாசு மூலம் அந்த அளவுக்கு பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் கிடையாது. அதுபோல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பல வகையான பசுமை பட்டாசுகளும் தற்போது வந்து விட்டன.ஆகவே இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு நேரக் கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த பாபு: நாட்டில் சட்டம் போட வேண்டியது திருத்த வேண்டிய கட்டுப்பாடு விதிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அதை விடுத்து ஆண்டுக்கு ஒரு நாள் கொண்டாடப்படும் தித்திக்கும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிப்பிப்பது வேதனைக்குரியது. இதனால் பாதிக்கப்படுவது அனைத்து தரப்பினர் குறிப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிறுவர் சிறுமிகள் தவிர இந்த பட்டாசுகளை நம்பி தொழில் செய்யும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாட்டினை தளர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பசுமை பட்டாசு

தொண்டியைச் சேர்ந்த ரவி: 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என கூறுவது மனித உரிமைக்கு எதிரானதாகும். இது பாரம்பரிய கொண்டாட்டத்திற்கு தடைவிதிப்பது போல் உள்ளது. பசுமை பட்டாசுகள் வந்த பிறகும் இது போன்ற நேர கட்டுப்பாடு விதிப்பது ஏற்புடையதல்ல. முதல் நாள் மாலை 6 மணி முதல் தீபாவளி அன்று மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். குறைவான நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குழந்தைகள் மனதை பாதிக்க கூடிய செயல். அரசின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. இதற்கு அரசு பட்டாசை முழுமையாக தடை செய்யலாம். அதனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கடலாடி ராஜீவ் காந்தி:.ஆண்டுக்கு 1 நாள் மட்டுமே உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடப்படும் திருநாள் புதுமண தம்பதிகள் தங்களது பிறந்த வீட்டில் உள்ள உறவுகளுடன் கொண்டாடப்படும் ஒரே தீபாவளி தலை தீபாவளி.பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை குறைப்பதை காட்டிலும் பாதுகாப்புடன் வெடிப்பதற்கான அறிவுறுத்தல்களை அரசு வழங்கியிருக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபடும் வெடிபொருட்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழல் மாசுபடாமல் உள்ள வெடிகளை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கி கூடுதல் நேரங்களை வெடிப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கலாம்.

முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை மயில்சாமி: வருடத்தில் ஒரு நாள் தீபாவளி அன்று தான் அனைவரும் பட்டாசு வெடிப்பது வழக்கம். இப்படி இருக்கும்போது பட்டாசு வெடிப்பதற்கு மிகுந்த குறைவான நேரம் ஒதுக்குவது என்பது சரியானது இல்லை. அதனால் பட்டாசு வெடிப்பதற்கு இன்னும் கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டும். கூறினார்.

அதிர்ச்சி

ராமேசுவரம் ஜெயலட்சுமி: தீபாவளி என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் பலகாரங்கள் தான். தீபாவளி அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவார்கள். பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடுகள் விதிப்பது உண்மையாகவே ஒரு அதிர்ச்சியான ஆக உள்ளது. எவ்வளவோ வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரம் கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.

உத்தரவை திரும்ப பெற வேண்டும்

சிவகங்கை வர்த்தக சங்க தலைவர் அறிவு திலகம்:- தீபாவளி என்பது நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை. இந்த பண்டிகையின் மூலம் பல்வேறு தரப்பினர்களுக்கும் தங்களது வியாபாரம் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்தியாவிற்கே பட்டாசு தயாரித்து வழங்கும் ஒரு பகுதியாக சிவகாசி நகரம் திகழ்கிறது. ஏற்கனவே சீன பட்டாசுகளின் வரவால் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வயோதிகர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி காலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் பட்டாசு தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றார்.

பாதிப்பு

சிவகங்கை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் முருகன்:- தீபாவளி என்பது நம்முடைய பாரம்பரியமிக்க ஒரு பண்டிகையாகும். முன்பெல்லாம் தீபாவளியை முதல் நாள் இரவில் இருந்தே கொண்டாடுவார்கள். இரவு முழுவதும் வான வேடிக்கைகள் வெடித்து குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் தற்பொழுது மாறிவரும் கால சூழலில் இவையெல்லாம் குறைந்துவிட்டது. தீபாவளியை நம்பி ஏராளமானவர்கள் வெடிக்கடை அமைத்து விற்பனை செய்வார்கள். ஆனால் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் வெடிப்பதற்கு உரிய ஆர்வம் இல்லாமல் போய்விடும். இதனால் வெடி விற்பனை செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

திவ்யதர்ஷினி (திருப்பத்தூர்):- தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு ெவடிக்க வேண்டும் என்பது உலக சூற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரவேற்கிறேன். அதேசமயம் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளையும், அதிக புகை வரும் பட்டாசுகளையும் வெடிக்காமல் பாதுகாக்க வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு என்பது தவிர்க்க முடியாதது. எனவே அரசு அறிவித்த சட்டத்தை மதித்து பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story