அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்


அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
x

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகிழ்ச்சி

இதுதொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெரும் அளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்றுமாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டு உள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

உத்தரவு

வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என 2018-ல் அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி, தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளைபோல தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவித்து உள்ளது.

பாதிப்பு

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மாசற்ற தீபாவளி

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடி மகிழ வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story