இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி கருகும் பயிர்கள்
இரட்டைக்குளம் ஏரி தூர்வாரப்படாததால் தண்ணீரின்றி பயிர்கள் கருகுகின்றன.
விக்கிரமங்கலம்:
இரட்டைக்குளம் ஏரி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் மற்றும் கீழநத்தம் பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் நீர்ப்பாசனத்திற்கு முக்கியமானதாக இரட்டைக்குளம் ஏரி திகழ்கிறது. இந்த ஏரி சுமார் 10 ஏக்கர் சுற்றளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர் வரத்தை நம்பி அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் சுற்றளவில் உள்ள நஞ்சை நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஏரி மற்றும் விவசாய நிலங்கள் விக்கிரமங்கலத்தில் உள்ள சொளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த இரட்டைக் குளம் ஏரிக்கு வரும் மழை நீரை மட்டுமே நம்பி வருடத்திற்கு ஒருமுறை விவசாயம் செய்து வருகின்றனர்.
தூர்வாரப்படவில்லை
இந்நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்யும்போது, இரட்டைக் குளம் ஏரியில் போதுமான தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய் விடுகிறது. இதனால் நெல்மணிகள் பூத்து கதிர்விடும் சமயத்தில் அப்படியே காய்ந்து கருகி போய் விடுகின்றன. இதன் காரணமாக சரியான விளைச்சல் இல்லாமல் வெறும் வைக்கோலை மட்டுமே விவசாயிகள் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த ஆண்டும் அந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயத்தில் நல்ல பலனை காணலாம் என்ற நினைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இரட்டைக் குளம் ஏரி சரியாக தூர்வாரப்படாததுதான் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் போதுமான தண்ணீரை ஏரியில் தேக்கி வைக்க முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி தூர்வாரப்பட்டது. அதற்கு பின்னர் ஏரி தூர்வாரப்படவில்லை.
கோரிக்கை
எனவே அரசு உடனடியாக இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை உயர்த்தி, ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து வாரிகளை சரி செய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என இப்பகுதி விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-
நெற்பயிர் காய்ந்து விடுகிறது
கீழநத்தத்தை சேர்ந்த விவசாயி கண்ணன்:- விக்கிரமங்கலம் மற்றும் கீழநத்தம் பகுதியில் சமூகத்தில் நலிவடைந்த மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அதிகமாக வசிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலமாக இந்த ஏரி தூர் வாரப்பட்டது. பின்னர் இந்த ஏரி தூர்வாரப்படவில்லை. இதனால் மழை பெய்த பின், விவசாயிகள் நிலத்தில் நாற்று நடும் வரை மட்டுமே ஏரியில் தண்ணீர் இருக்கிறது. நாற்று நட்ட பின்பு நெற்பயிர் விளைவதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறோம். மேலும் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கூட செலுத்த முடிவதில்லை. எனவே விவசாயத்தையே விட்டு விடலாமா என்று யோசிக்கும் நிலையில் தான் உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த ஏரியை தூர் வாருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.