ஆசனூர் அருகே சாலையை கடக்கும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை;வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஆசனூர் அருகே சாலையை கடக்கும் யானைகளை தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளவாடி
ஆசனூர் அருகே சாலையை கடக்கும் யானைகளை தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வனப்பகுதியில் வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் அதிக அளவில் காட்டு யானைகள் காணப்படுகின்றன. தற்போது ஆசனூர் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் செடி, கொடிகள் கருகி விட்டன. மரங்கள் காய்ந்து காணப்படுகின்றன.
இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் சாலைகளை அடிக்கடி கடந்து செல்கின்றன. குறிப்பாக ஆசனூர் வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் அடிக்கடி கடந்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.
தொந்தரவு
இந்த நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி நேற்று முன்தினம் மாலை காட்டு யானை ஒன்று ஆசனூர் அருகே சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தும், சத்தங்கள் போட்டும் அந்த யானைக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்த யானை, அந்த வாகன ஓட்டிகளை திரும்பி பார்த்ததுடன், அவர்களை துரத்த தொடங்கியது.
இதன்காரணமாக பயந்து போன வாகன ஓட்டிகள் வாகனத்தில் வேகமாக சென்றனர். இந்த காட்சியை அந்த வழியாக வந்த மற்றொரு வாகன ஓட்டி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
எச்சரிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் அவ்வப்போது கடந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அவ்வாறு ரோட்டை கடக்கும் யானைகளை துன்புறுத்தும் வேளைகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கை விடுத்தனர்.