கடலூர் அம்மா உணவகத்தில் 16 பெண் ஊழியர்கள் பணி நீக்கம்


கடலூர் அம்மா உணவகத்தில் 16 பெண் ஊழியர்கள் பணி நீக்கம்
x

கடலூர் அம்மா உணவகத்தில் 16 பெண் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பணி நீக்கம்

கடலூரில் உழவர் சந்தை அருகிலும், தலைமை ஆஸ்பத்திரியிலும் 2 அம்மா உணவகங்கள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 16 பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் நேற்று மாலை 5 மணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதை அறிந்த அம்மா உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று இரவு 8.30 மணிக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அம்மா உணவகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவியை ஒப்படைக்க மாட்டோம்

அப்போது அவர்கள், கடந்த 7 ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறோம். கொரோனா காலத்திலும் எங்கள் உயிரையும் துச்சமென நினைத்து பணி செய்தோம். ஆனால் எங்களை திடீரென மாநகராட்சி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி விட்டு, எங்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமித்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆகவே எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. எங்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி செய்ய மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் சாவியை யாரிடமும் ஒப்படைக்க மாட்டோம். மேலும் எங்களை பணிக்கு சேர்க்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்து, வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை கலைய மாட்டோம் என்று அங்கேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் இரவு 11 மணியை கடந்தும் நடைபெற்றது.

அம்மா உணவகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story