தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சாலையில் தடுப்பு அமைக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள காரை பிரிவு ரோட்டில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்தும் வருகின்றனர். இதேபோல் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். எனவே இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க இப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும். இல்லை என்றால் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காரை.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் முன்பு செயல்பட்டு வந்த தாலுகா அலுவலக கட்டிடம் வழியாக குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள் பயன்படுத்தும் இந்த சாலை பெயர்ந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் சில விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் பூங்காவிற்கு சிறுவர்- சிறுமிகள் சரியாக விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவர் அறிவியல் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குமார், பெரம்பலூர்.

பராமரிப்பின்றி பொது சுகாதார வளாகங்கள்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் உள்ள சில பொது சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி காட்சியளிக்கின்றன. இதனால் வீட்டில் கழிவறை வசதி இல்லாத ஆண்கள், பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் இயற்கை உபாதை, சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பொது சுகாதார வளாகங்களை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில், பெரம்பலூர்.

போக்குவரத்துக்கு இடையூறு

பெரம்பலூர் நகரின் முக்கியமான சாலைகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது இரு, நான்கு வாகனங்களை நிறுத்தி விட்டு டீக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைக்கு சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் அல்லது அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அய்யப்பன், பெரம்பலூர்.


Next Story