தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

சாலையோர கடைகளால் விபத்து

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி காலை மற்றும் மாலை வேலைகளில் இப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் இந்த பகுதியில் நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் அருகே தரைக்கடைகள் அதிகளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.கே.நகர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி செல்லும் சாத்தனூர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டுள்ள பகுதியில் சாலையில் பள்ளமாகவே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த பள்ளத்தை சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்ற தெரிவித்தனர்.

பொதுமக்கள், மன்னார்புரம்.

நாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் விஸ்தரிப்பு ஐஸ்வர்யாநகர் சாய்பாபா காலனி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுப்பிரமணியன், லால்குடி.

தெருவிளக்கு வசதி வேண்டும்

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வராநகர் அருகே மொராய்கார்டன் ரன்வேநகரில் 10 வீதிகள் உள்ளன. 10 வீதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு வீதியில் கூட தெருவிளக்கு வசதி இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அனைத்து வீதிகளும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அஞ்சுகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்துலட்சுமி, திருச்சி.

கலங்கலாக வரும் குடிநீர்

திருச்சி மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட உறையூா் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் அழுக்காகவும், கலங்கலாகவும் வருகிறது. இதை குடிப்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே குடிநீரை சுத்தமாக வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜா, உறையூர்.


Next Story