தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் காந்திகிராமம் , மூலகாட்டனூர் மேற்பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனை கால்நடைகள் கிளறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரவி, காந்திகிராமம்.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிக்கு தினமும் பல தனியார் கல்லூரி பஸ்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் ஒரு சில தனியார் கல்லூரி பஸ்கள் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் நடந்து செல்வோர் விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.

பாலம் கட்டுவதற்கான பதாகை வைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் இருந்து குந்தாணிபாளையம் நத்தமேடு வரை சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்டமங்கலம் பழைய காலனி அருகே தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக திடீரென ஒகுழியை பறித்துள்ளனர். ஆனால் தார் சாலையின் குறுக்கே குழி பறிக்கப்படுவது குறித்து எந்த ஒரு பதாதைகளும் வைக்கப்படாததால் புங்கோடையில் இருந்து குந்தாணி பாளையம் நத்தமேடு செல்லும் வாகனங்களில் தார் சாலையில் குறுக்கே குழி பறிக்கும் இடம் வரை வந்து திரும்ப சென்று அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது என பதாதைகள் வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புங்கோடை.

ஆபத்தான மின்கம்பங்கள்

கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை புதிதாக வைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நடையனூர்.

சேதமடைந்த குடிநீர் தொட்டி

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் காலனியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுமார் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகளும் அவ்வபோது கீழே விழுந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வேட்டமங்கலம்.


Next Story