தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

பஸ்களை சரியான நேரத்தில் இயக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விஸ்வக்குடி, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமங்களுக்குள் தினமும் 5 முறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மதியம் நேரத்தில் ஊருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வெளியூர்களுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பிள்ளையார்பாளையம்.

குடிநீர் முறையாக கிடைக்குமா?

பெரம்பலூர் நகராட்சிக்குட்டபட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு அன்றாட தேவைக்காக 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விடப்படுகிறது. இதனால் குடிநீரை காசுகொடுத்தும் வாங்கும் நிலை ஏற்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீருக்காக மாதம் ஒரு தொகையை செலவு செய்ய வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பூ மாலைகளை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிலையில் ஒரு மாதம் ஆகியும் அந்த மாலைகள் அகற்றப்படாமல் அப்படியே காய்ந்து கிடக்கிறது. இதனை அந்த வழியாக செல்பவர்கள் பார்த்து முகம் சுழித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூ மாலைகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

வரத்து வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் தெப்பகுளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்தால் பெரம்பலூர் பெரியஏரியில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் வழியாக வந்து தெப்பகுளம் நிரம்பி வழியும். இந்தநிலையில் வரத்து வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ஆங்காங்கே செடி, செடிகள் முளைத்து முட்புதர்கள்போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தும் தண்ணீர் தெப்பகுளத்திற்கு செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினமும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழைவும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் உள்ளே செல்லும் பஸ்கள் சிரமத்துடன் சென்று வருகிறது. மேலும், மழைகாலங்களில் இந்த குண்டும், குழியுமான இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story