சூளகிரி சின்னார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு871 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்


சூளகிரி சின்னார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு871 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
x
தினத்தந்தி 8 July 2023 12:30 AM IST (Updated: 8 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி சின்னார் அணையில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 871 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஆதாரமாக கொண்டு சூளகிரி சின்னாறு அணை விளங்குகிறது. கடந்த 2006-ம் ஆண்டிற்கு பின்னர் இந்த அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து நேற்று அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இருந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜை செய்து தண்ணீரை திறந்து வைத்து மலர்தூவினர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் மூலம் சூளகிரி பகுதியில் 14 கிராமங்களில் உள்ள 871 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளது. மேலும் 17 ஆண்டுகளுக்கு பிறகு சின்னாறு அணை நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது அணையின் நீர்இருப்பு 32.64 அடியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story