மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டம் அசத்தலாக அரங்கேற்றம்
நமது பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டத்தை அசத்தலாக அரங்கேற்றம் செய்துள்ளனர்.
நமது பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக மடத்துக்குளம் பகுதியில் வள்ளி கும்மி ஆட்டத்தை அசத்தலாக அரங்கேற்றம் செய்துள்ளனர்.
கொங்கு மண்டலம்
நமது தமிழ் நாட்டின் பாரம்பரிய கலைகள் பலவும் வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் குழு மனப்பான்மை, உடல் உறுதி, மன உறுதி ஆகியவற்றை மேம்படுத்துபவையாக இருந்துள்ளன. ஆனால் அவற்றில் பலவும் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும் வள்ளி கும்மி ஆட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கொங்கு மண்டலம் முன்னிலையில் உள்ளது.
கிராமப்புறங்களில் திருவிழாக்களின் போது முளைப்பாரி வைத்து கும்மியடிக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது. அவ்வாறு கும்மியடிக்கும் போது நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் காலத்துக்கேற்ப பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் பாடுவதுண்டு. அகநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் கும்மி ஆட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளது.
அரங்கேற்றம்
விஞ்ஞான வளர்ச்சியால் பாரம்பரிய கலைகளில் பொதுமக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதில் ஒருசிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை ஒருசில ஆசான்கள் இலவசமாக கற்பித்து வருகின்றனர். சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை வள்ளி கும்மியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மடத்துக்குளத்தையடுத்த மெட்ராத்தி ஊராட்சி தாசர்பட்டி பகுதியில் சங்கிலி ஸ்ரீகருப்பண்ணசாமி வள்ளி கும்மி கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்டம் 5-வது அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் காலில் சலங்கை கட்டி ஒரே மாதிரியான உடை அணிந்து ஆடியது கண்ணையும் மனதையும் கவர்வதாக இருந்தது. முருகன்-வள்ளி திருமணம் குறித்த நாட்டுப்புறப்பாடல்களுடன் நளினமான அசைவுகளுடன் ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஊக்கத்தொகை
கேரளா மாநிலத்தில் செண்டை மேளத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அதுபோல நமது பாரம்பரிய கலையை வளர்க்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.