பொள்ளாச்சி பகுதிகளில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பொள்ளாச்சி பகுதிகளில் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தனியார் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி கொண்டு கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். வளைவான பகுதியில் பஸ் திரும்பிய போது படிக்கட்டில் தொங்கி கொண்டிருந்த 2 மாணவர்கள் தவறி கீழே விழுந்தனர். இதில் ஒரு மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகும் பஸ்சின் படிக்கட்டில் தொங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசு, தனியார் பஸ்களில் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
உரிமம் ரத்து
பஸ்களில் குறிப்பிட்ட அளவு தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கும் அளவிற்கு பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. படிக்கட்டில் பயணம் செய்வதற்கு நடத்துனர் மாணவர்களை அனுமதிக்க கூடாது. பஸ்சிற்குள் வர மறுக்கும் மாணவர்களை கீழே இறக்கி விடலாம்.
ஆனால் அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் படிக்கட்டில் தொங்கும் வரை பயணிளை ஏற்றுகின்றனர். எனவே அதிகாரிகள் காலை, மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். படிக்கட்டில் மாணவர்களை தொங்குவதற்கு அனுமதிக்கும் பஸ்களின் டிரைவர், நடத்துனர் உரிமத்தை ரத்து செய்வதோடு, பஸ்களின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான் விபத்துக்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.