நாளை மறுநாள் குண்டம் விழா:பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 1,650 போலீசார் பாதுகாப்பு
1,650 போலீசார் பாதுகாப்பு
நாளைமறுநாள் நடைபெற உள்ள குண்டம் விழாவையொட்டி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 1,650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
நாளை மறுநாள் குண்டம் விழா
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பர வீதி உலா கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்று 28-ந் இரவு கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் குழி கம்பம் சாட்டப்பட்டது.
முக்கியமான குண்டம் விழா நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
1,650 போலீசார்
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் என மொத்தம் 1,650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் உயர்கோபுரம் அமைக்கப்பட்டு அதன்மூலமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பொதுமக்களுக்கு உதவுவதற்கு வசதியாக 3 தகவல் மையங்களும் போலீசாரால் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. குண்டம் இறங்காத பக்தர்கள் அம்மனை தரிசிக்க வசதியாக தனி வரிசை வழியும் இந்த ஆண்டு ஏற்படுத்தப்பட உள்ளது. கோவில் விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக 3 இடங்களில் பஸ் நிலையங்களும், 15 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.