பந்து வீசியபோது மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் உயிரிழப்பு


பந்து வீசியபோது மின்னல் தாக்கி  பிளஸ்-1 மாணவன் உயிரிழப்பு
x

அரசுப்பள்ளியில் விளையாட்டு பாடவேளையின்போது, மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய பிளஸ்-1 மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

அரசுப்பள்ளியில் விளையாட்டு பாடவேளையின்போது, மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய பிளஸ்-1 மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

பிளஸ்-1 மாணவன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார் கோவில் யூனியன் தாளையடிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேலு. இவருடைய மகன் கஜினி (வயது 16). நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை 3 மணி அளவில் விளையாட்டு பாடவேளை என்பதால் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். மாணவன் கஜினி தனது வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

கஜினி பந்து வீசிக்கொண்டு இருந்தபோது திடீரென்று இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாணவன் கஜினி உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

பெற்றோர் கதறல்

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், கஜினியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவனின் உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடந்த இந்்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நயினார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் கஜினி வெள்ளியால் ஆன சங்கிலியை கழுத்தில் அணிந்திருந்ததால், மின்னலால் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story