ஊருணியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி; காப்பாற்ற ெசன்ற வாலிபரும் சாவு


ஊருணியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி; காப்பாற்ற ெசன்ற வாலிபரும் சாவு
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:45 PM GMT)

சிவகங்கை அருகே ஊருணியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானான். சிறுவனை காப்பாற்ற சென்ற வாலிபரும் உயிரிழந்தார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே ஊருணியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானான். சிறுவனை காப்பாற்ற சென்ற வாலிபரும் உயிரிழந்தார்.

தண்ணீரில் மூழ்கினர்

சிவகங்கை அருகே உள்ள வி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அய்யங்காளை (வயது 22). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய மகன் குணா (4). இவன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான். அய்யங்காளையும், குணாவும் உறவினர்கள் ஆவார்கள்.

நேற்று மாலையில் அய்யங்காளை அதே பகுதியில் உள்ள சேது ஊருணியில் குளிக்க சென்றார். அப்போது அவர் சிறுவன் குணாவையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அய்யங்காளையும், குணாவும் ஊருணியில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குணா ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யங்காளை, குணாவை காப்பாற்றுவதற்காக சென்றார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் அய்யங்காளையும் தண்ணீரில் மூழ்கினார்.

2 பேர் சாவு

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல் தண்ணீரில் மிதந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இருவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். பின்னர் அய்யங்காளை, குணாவின் உடல்களை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருணியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story