கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!
கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகள் பவிஸ்கா (வயது 1). கடந்த 7-ந்தேதி பாலமுருகன் வீட்டில் முறுக்கு செய்தார்.
பின்னர் முறுக்கு செய்த எண்ணெய் பாத்திரத்தை வீட்டின் வெளியில் வைத்திருந்தார். அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பவிஸ்கா கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்து விட்டாள். இதில் உடல் முழுவதும் வெந்ததால் வலியால் துடித்தாள்.
படுகாயம் அடைந்த குழந்தை பவிஸ்காவை பெற்றோர் மீட்டு போரூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பவிஸ்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பவிஸ்கா பரிதாபமாக இறந்தாள். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.