மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் விவகாரம்: முதன்மை தலைமை வன பாதுகாவலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவு


மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் விவகாரம்: முதன்மை தலைமை வன பாதுகாவலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவு
x

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக முதன்மை தலைமை வன பாதுகாவலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக முதன்மை தலைமை வன பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வனவிலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியானதையடுத்து உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகளையும் யானை கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி இரு குட்டிகளும் யானை கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்காததால் 2 குட்டி யானைகளும் தற்போது எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை என்று முரளிதரன் மற்றும் சொக்கலிங்கம் ஆகிய இரு வனவிலங்கு ஆர்வலர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கூடுதல் தலைமை வக்கீல், தற்போது இரண்டு குட்டி யானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள ஒரு ஆண் யானையுடன் சேர்ந்துள்ளதாகவும் அது சம்பந்தமான புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் மின்வேலியில் சிக்கி விலங்குகள் பலியாவதை தடுக்க உரிய விதிகளை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக முதன்மை தலைமை வன பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

1 More update

Next Story