திருவள்ளூர் மாணவி மரணம் - பிரேத பரிசோதனை தொடங்கியது


திருவள்ளூர் மாணவி மரணம் - பிரேத பரிசோதனை தொடங்கியது
x

திருவள்ளூர் 12 ஆம் வகுப்பு மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த சூரியநகரம் தெக்கனூர் காலனியை சேர்ந்த பூசனம்-முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (வயது 17) என்பவர் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி சரளா பள்ளி சீருடை அணிந்து விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட தயாரானார். முன்னதாக சக மாணவிகளுடன் கேண்டீனில் சாப்பிட சென்றார். பின்னர் திடீரென அவர் மட்டும் தனியாக விடுதியில் உள்ள முதல் மாடிக்கு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக மாணவிகள் அங்கு சென்று அவரை தேடினர். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடந்தார்.

உடனே இதுகுறித்து விடுதி பொறுப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் விரைந்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு உடனடியாக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தற்போது தொடங்கியுள்ளது. உடற்கூறு ஆய்வின்போது சிபிசிஐடி அதிகாரிகளும் உடன் உள்ளனர். அண்ணன் சரவணன் முன்னிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை நடக்கிறது. பாதுகாப்பிற்காக பிரேத பரிசோதனை நடைபெறும் மருத்துவமனைக்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story