உதவி பேராசிரியர் மனைவியின் உடல் சேலம் ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைப்பு


உதவி பேராசிரியர் மனைவியின் உடல் சேலம் ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 7:52 PM GMT (Updated: 14 Jun 2023 8:15 AM GMT)

எடப்பாடி அருகே உதவி பேராசிரியர் மனைவியின் சாவில் மர்மம் நீடிப்பு சேலம் ஆஸ்பத்திரி பிணவறைக்கு உடல் அனுப்பி வைப்பு

சேலம்

எடப்பாடி

எடப்பாடி அருகே உதவி பேராசிரியர் மனைவியின் சாவில் மர்மம் நீடிக்கிறது. எனவே மறுபிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மர்மச்சாவு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெடுங்குளம் கிராமம், செம்மண் காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (29), சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கரூர் மாவட்டம் கோட்டமங்கலத்தை சேர்ந்த பட்டதாரி பெண் சுரேகா என்ற சுந்தரேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சுரேகா மயங்கி விழுந்துள்ளார். அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுரேகா மர்மமான முறையில் இறந்தார்.

பிணவறையில் உடல்

சுரேகா உடல் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எங்களுக்கு திருப்தி இல்லை என்றும், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று சுரேகா தரப்பினர் போலீசாரிடம் வலியுறுத்தினர். மறுபிரேத பரிசோதனை செய்வதற்காக சுரேகா உடலை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மறுபிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே சுரேகாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. அவரது சாவு குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி விசாரணை நடத்த இருக்கிறார். மறுபிரேத பரிசோதனைக்காக சுரேகா உடல், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் சுரேகா சாவு தொடர்பாக அதிரடி தகவல்கள் வெளியாகக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். சுரேகா சாவில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story