மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைக்காக சென்னையில் 2 மேம்பாலங்களை இடிக்க முடிவு - 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்டப்படும்
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைக்காக சென்னையில் 2 மேம்பாலங்கள் இடிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பாலங்கள் கட்டப்பட உள்ளன.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2-ம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் 2026-ம் ஆண்டு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் 50 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. இந்த வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
இந்த மெட்ரோ ரெயில் பாதையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக சென்னை அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலமும், ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட உள்ளன.
இந்த 2 மேம்பாலங்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கட்டப்பட உள்ளன. அடையாறு சந்திப்பில் பாலம் இடிக்கும் பணிகளை தொடங்குவதற்கு முன்பு போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் தற்போதுள்ள பாலத்தை ஒட்டியே இருவழிப்பாதை மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இந்த இருவழிப்பாதை மேம்பாலம் கட்டி முடித்ததும், தற்போது இருந்து வரும் பாலம் இடிக்கப்படும். சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததும் இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் அதே இடத்தில் இருவழிப்பாதை பாலமாக கட்டப்பட உள்ளது.
இதன்மூலம் அடையாறு சந்திப்பில் 4 வழிப்பாதையுடன் கூடிய மேம்பாலம் அமையும். இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்த மேம்பாலம் அடையாறு பகுதியை பெசன்ட்நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தை பொறுத்தமட்டில் 50 சதவீத அளவுக்கு ஒரு பகுதி மட்டும் இடிக்கப்பட உள்ளது. மெட்ரோ பணி முடிவடையும் போது இடிக்கப்பட்ட பகுதி மீண்டும் கட்டப்படும்.
இந்த பாலம் இடிக்கப்பட்டதும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆரம்பத்தில் அடையாறு பகுதியை திருவான்மியூருடன் இணைக்கும் மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தற்காலிக இரும்பு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்காலிக பாலத்தை உருவாக்கி அகற்றுவதால் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் அதற்கு கான்கிரீட் கட்டுமானம் போலவே செலவு அதிகமாகும்.
எனவே, அதற்கு இணையாக புதிய மேம்பாலத்தை கட்ட திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரெயில் நிறுவன பணி மூலம் அடையாறு பகுதியில் இரு வழிச்சாலையுடன் கூடிய 2 மேம்பாலங்கள் அமைய உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.