"பள்ளிகளில் தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்" - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பள்ளிகளில் தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x

தமிழ் பாடவேளையை குறைத்திருப்பது தமிழுக்கு செய்யும் அவமரியாதை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளை குறிப்பில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுகின்றன.

இந்த நிலையில் தமிழ் பாடவேளையை குறைத்திருப்பது தமிழுக்கு செய்யும் அவமரியாதை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6-10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்!

வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை!

எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்!"

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Next Story