சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - சீமான்


சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - சீமான்
x
தினத்தந்தி 22 Dec 2023 2:21 PM GMT (Updated: 22 Dec 2023 2:25 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களை அழித்தொழிப்பது என்பது விரைவாக தமிழ்நாடு பாலைவனமாகவே வழிவகுக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், குறிஞ்சாகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேளாண் விளை நிலங்களை அழித்து கிராபைட் கனிமவளச் சுரங்கம் அமைக்கும் இந்திய மத்திய அரசின் அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. சுரங்கம் தோண்டுவதற்காக வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக விளை நிலங்களைப் பறிக்கும் பாஜக அரசின் செயல் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட குறிஞ்சாகுளம், சங்குப்பட்டி, திருவேங்கடம் பகுதிகளில் புதிதாக கிராபைட் கனிமவளச் சுரங்கம் அமைப்பதற்காக 600 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளதால் வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயிர் வாழ உணவளிக்கும் தாய்க்கு இணையான விளைநிலத்தை, தீர்ந்து போகும் வளங்களுக்காக கூறுபோட்டு விற்பதென்பது மனித வாழ்விற்கு மட்டுமின்றி உயிர் சூழலுக்கே முற்றிலும் எதிரானதாகும்.

ஏற்கனவே அரியலூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனிம வளங்கள் எடுப்பதற்காக பறிக்கப்பட்ட விளைநிலங்கள் பல நூறு அடிகள் குடைந்தெடுக்கப்பட்டு தற்போது எதற்கும் உதவாத பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டது. அவை தவிர ஹைட்ரோ கார்பன், கெயில் எரிகாற்று, ஓஎன்ஜிசி எரி எண்ணெய் என்று நாள்தோறும் புதிது புதிதாக பல்வேறு நாசகர திட்டங்களைத் தொடர்ச்சியாக தமிழர் நிலத்தில் திணித்து மீதமுள்ள நிலங்களையும் அழித்தொழிக்க முயற்சித்து வருகிறது இந்திய மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறிஞ்சாகுளம் பகுதியில் கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவும் விளைநிலங்களை பாழ்படுத்தி நாசமாக்கவே வழிவகுக்கும்.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என 'நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்' பிரிவு – 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடிநீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டினை ஆளும் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஈராண்டு காலத்தில் ஆட்சி அதிகார பலத்தைப் பயன்படுத்தி, கோவை, திருவண்ணாமலை (மேல்மா), பரந்தூர் என தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிக்கும் கொடுங்கோன்மைச் செயல்களை அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய மத்திய அரசும் தொழிற்சாலைகளும், சுரங்கங்களும் ஒருபோதும் உணவினை உற்பத்தி செய்யாது என்ற உண்மையை உணராமல் தனது பங்கிற்கு தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களை அழித்தொழிப்பது என்பது விரைவாக தமிழ்நாடு பாலைவனமாகவே வழிவகுக்கும்.

ஆகவே, குறிஞ்சாகுளத்தில் வேளாண் நிலங்களைப் பறித்து கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவை இந்திய மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய மத்திய அரசினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story