பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
திமுகவின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனை முற்றிலும், மறுத்த திமுக, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன் என திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் அவதூறு கருத்து வெளியிட்டதாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, நற்பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதாக முதல்-அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் சார்பில் தொடர்ந்த வழக்கின் விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.