ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்பு - கலெக்டர் தகவல்


ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் பட்டப்படிப்பு - கலெக்டர் தகவல்
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பை தாட்கோ மூலம் எச்.சி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவிகள் முதல் ஆண்டில் எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் 6 மாதங்களுக்கு இணைய வழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்கு தேவையான மடிகணினியை எச்.சி.எல். நிறுவனமே வழங்கும். அடுத்த 6 மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில் அமைந்துள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும்.

முதல் ஆண்டில் 6-வது மாதம் முதல் மாணவர்களுக்கு மேற்படி நிறுவனத்தின் வாயிலாக ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

2-வது ஆண்டில் மாணவர்களுக்கு மூன்று விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும்.

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ்- பிலானி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. (டிசைன் - கம்ப்யூட்டிங்) பாடப்பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இந்த 4 ஆண்டு பட்டப்படிப்பை எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இந்த கல்லூரியில் சேருவதற்கு 12-ம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலை கழகத்தில் மாணவர்களின் தகுதிககேற்ப எச்.சி.எல். நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் பி.சி.ஏ.3 வருட பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள AMITY பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பி.சி.ஏ., பி.பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

மேற்காணும் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயிற்சிக்கான கட்டண தொகையை தாட்கோவே ஏற்கும். பிட்ஸ்.பிலானி பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் மற்றும் சாஸ்தரா மற்றும் AMITY பல்கலைக் கழகத்தில் 3 ஆண்டுபட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் எச்.சி.எல். நிறுவனத்தில் முதல் ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்கப்படும்.

மேற்படி நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நுழைவு திறனுக்கான 3 பாடப்பிரிவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் இணையவழி வாயிலாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

மேலும் இந்த திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story