சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் டெல்லி விமானம் ரத்து: பயணிகள் அவதி


சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் டெல்லி விமானம் ரத்து: பயணிகள் அவதி
x

கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை 10.05 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 167 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பு உள்ளிட்ட சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக காத்து இருந்தனர்.

டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு வரும் ஏர் இந்தியா விமானம் மீண்டும் காலை 10.05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோல் டெல்லியில் இருந்து விமானம் காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, விமானத்தில் எந்திரக்கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின் மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதையடுத்து டெல்லிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிகள் ஏற்றப்படவில்லை. விமானம் தாமதமாக புறப்படும் என்று கூறி ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். விமான என்ஜினீயர்கள், எந்திரங்களை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மதியம் வரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்படவில்லை. 2 மணி நேரத்துக்கு பிறகும் கோளாறை சரி செய்ய முடியாததால் பயணிகளை வேறு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்க சென்னை விமான நிறுவன அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனால் அதில் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story