மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்தும், இந்த பிரச் சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் புகழேந்தி, குமரன், ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் தலைமையிலும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பிரெட்டிபட்டியில் மாவட்ட துணை தலைவர் சண்முகம் தலைமையிலும், காரிமங்கலத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி சின்னப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோஷங்கள்
இதேபோல் தர்மபுரியில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலகம், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கலவரத்தில் பழங்குடி மக்களின் வீடுகள், தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் பலியாகி உள்ளனர். பழங்குடியின பெண்கள் வன்முறை கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். மதவாதத்தின் அடிப்படையில் நடைபெறும் வன்முறையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.