மணிப்பூர் கலவரத்தை கண்டித்துதர்மபுரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் கலவரத்தை கண்டித்துதர்மபுரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2023 1:00 AM IST (Updated: 26 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தர்மபுரியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி ஒருங்கிணைந்த கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, கவிதா ஆகியோர் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் பத்மா, ஜெயா, முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட துணைச்செயலாளர்கள் ரேணுகாதேவி, ராஜகுமாரி, மாவட்ட தலைவர்கள் மேகலா, அமிர்தம், ராஜேஸ்வரி, சிவகாமி ஆகியோா் முன்னிலைவகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் முன்னாள் மேயரும், தி.மு.க. மகளிர் தொண்டர் அணி மாநில துணை அமைப்பாளருமான ரேகாபிரியதர்சினி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பு ஏற்று மணிப்பூர் முதல்-அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கொட்டும் மழை

ஆர்ப்பாட்டத்தின் போது கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் குடை பிடித்து படி மணிப்பூர் கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் பெண்கள் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன், கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சோனியா, மோகனா, சித்ரா, குமுதா, லிங்கம்மாள், ஆனந்த லட்சுமி மணிமேகலை, மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் ரத்தினம் கந்தசாமி, பூங்கொடி, கங்கா, முருகம்மாள், வசந்தி, மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


Next Story