மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும். அங்கு அமைதியை உருவாக்க வேண்டும். மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம், மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் அங்கம்மாள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயலாளர் முருகன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பழங்குடி மக்களின் வீடுகள், தேவாலயங்கள் எதிர்த்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்கள் மீது கூட்டு பாலியல் வன்முறை நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து விசாரணையின் அடிப்படையில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தாத மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.