பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.45 எனவும், ஒரு லிட்டர் எருமை பாலுக்கு ரூ.54 ஆகவும் விலை உயர்வை அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்கத்தொகை அறிவித்தது வெறும் கண்துடைப்பு ஆகும். எனவே மறுபரிசீலனை செய்து, ஒரு லிட்டருக்கு ரூ.5 வீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்துசாமி, தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சதாசிவம், பொருளாளர் தங்கரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் முனுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.