ஆர்ப்பாட்டம்; 35 பேர் கைது
மதுரையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நா.வும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக கோரிப்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை தாங்கினர். மாநில செயலாளர் நஜ்மா பேகம் கண்டன உரை நிகழ்த்தினார். துணை தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பகுர்தீன், தொகுதி தலைவர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.