விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு, எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்புலி, அகரம், கொன்னையார், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மரப்பரை, பருத்திப்பள்ளி, வண்டிநத்தம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டூர், கைலாசம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அன்புமணி பேசினார். இதில் மத்திய அரசு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டத்திற்கு தேவையான ரூ.2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக வேலை வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர்ணயித்து வழங்க வேண்டும். ஆன்லைன் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பாண்டியன், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் ஆறுமுகம், வரதராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.