மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்லிமலை சேலூர் நாடு ஊர்முடிபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு பிரதான சாலையாக இருப்பது செம்மேடு முதல் வெண்கல்பாடி வரை செல்லக்கூடிய சாலையாகும். இந்த சாலையில் வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி வரை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்தசாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் அடிக்கடி விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைகின்றனர். எனவே சேதமான இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகி கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் மலைவாழ் மக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக அவர்கள் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்டவைகளை ஒப்படைக்க கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.