இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 10:00 AM IST (Updated: 30 May 2023 10:04 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி உள்பட 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு ஆகியவற்றில் உள்ள குறைகளை காரணம் காட்டி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்தது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்குமரன், மாதேஸ்வரன், மாநில குழு உறுப்பினர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி, மாவட்ட நிர்வாகி மாதையன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துபேசினர்.

வாபஸ் பெற வேண்டும்

தர்மபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் சிறிய குறைகளை காரணம் காட்டி இளநிலை மருத்துவ படிப்பிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த கல்வி ஆண்டில் 3 கல்லூரிகளிலும் இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story